அமெரிக்க பாராளுமன்றம் அருகே காரில் வெடிகுண்டு? மிரட்டல் விடுத்த நபர் கைது

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடம் அமைந்துள்ளது. அதிக பாதுகாப்பு நிறைந்த இப்பகுதி அருகே நேற்று கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்தக் காரை ஓட்டி வந்த நபர் போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு பாராளுமன்ற கட்டிடம் அருகே நிறுத்தப்பட்டுள்ள காரில் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருப்பதாகக் கூறினார்.

உடனடியாக, பாதுகாப்பு படையினர் அந்தக் கார் நின்ற பகுதியை சுற்றிவளைத்தனர். காரில் இருந்த நபரை காரை விட்டு கீழே இறங்கும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சுமார் 4 மணி நேர பரபரப்பிற்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் தனது காரை விட்டு கீழே இறங்கி பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் பாராளுமன்ற கட்டிடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த காரை முழுவதும் சோதனை செய்தனர். அதில் காரில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ப்ளோய்டு ரே ரோஸ்பெரி  49 என தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.