ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையும் – போரிஸ் ஜான்சன்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால் பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபுலை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்ததாகவும், அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொண்டதன் மூலம் நிலவரம் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையும் அல்லது அதிகாரப் பகிர்வு ஏற்படும் என்று தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.