4-வது பெரிய நகரத்தை கைப்பற்றினர்… ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் பிடி இறுகியது

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையொட்டி தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பல மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
சமீபத்தில் முக்கிய மாகாண தலைநகரங்களையும் அந்நாட்டின் 2-வது பெரிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். அடுத்த தலைநகர் காபூலை குறிவைத்துள்ள தலிபான்கள் அந்த நகரை நோக்கி முன்னேறி வருகிறார்கள். மேலும் காபூலை சுற்றியுள்ள மாகாண பகுதி மற்றும் நகரங்களையும் தங்கள் வசம் கொண்டு வருகிறார்கள். தலிபான்கள் முன்னேறி வருவதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தடுக்க முடியவில்லை.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டில் 4-வது பெரிய நகரான மசார்-இ-ஷெரீப் நகரை தலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர்.  அதேபோல் மத்திய ஆப்கானிஸ்தான் மாகாணமான டேகுன்தி மாகாணத்தையும் தலிபான்கள் கைப்பற்றினர். இங்கு சண்டையிடாமல் இந்த மாகாணம் தலிபான்கள் வசம் வந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் முக்கிய மாகாணமான நகர்காரின் தலைநகர் ஜலாலாபாத் தலிபான்களிடம் இன்று காலை வீழ்ந்தது. இந்த நகரம் காபூலுக்கு கிழக்கே அமைந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தையும், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலையும் இணைக்கும் சாலை ஜலாலாபாத் வழியாக செல்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது தலிபான்கள் காபூலில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளனர். காபூலை தவிர முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசம் சென்றுவிட்டது. அதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் பிடி இறுகிவிட்டது.