ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் இலங்கை தொடர்பில் விவாதம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாத கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இலங்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல், ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

பேரவையின் 48ஆம் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலின் நகலில், இலங்கை விவகாரம் குறித்து முதல் நாளில் விவாதிக்க பட்டியலிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பெச்சலட், இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து வாய்மூல அறிக்கையை முன்வைக்க உள்ளார்.

இந்த அறிக்கை குறித்து, பேரவையின் உறுப்பு நாடுகள் தங்களின் கருத்துக்களை முன்வைக்க உள்ளதுடன், இலங்கையும் தமது பதிலளிப்பை வழங்கவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை தொடர்பில் பேரவையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்த உயர்ஸ்தானிகர் மிச்சல் பெச்சலட், இலங்கை அரசாங்கமானது, பொறுப்புக்கூறல் விடயத்தில் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை மேற்கொள்ள தவறியதாக குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், மனித உரிமைகள் பேரவையின் 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியமையானது, உண்மையான முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.