ரஷியாவின் புதிய விண்கலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு புறப்பட்ட 3 விண்வெளி வீரர்கள்

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இங்கு அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த கேத்லீன் ரூபின்ஸ், ரஷியாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த செர்ஜி ரைஜிகோவ் மற்றும் செர்ஜி குட்ஸ்வெர்கோவ் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் நேற்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கஜகஸ்தானில் ரஷியாவால் இயக்கப்படும் பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து ரஷியாவின் புதிய சோயுஸ் எம்.எஸ்.17 விண்கலத்தில் அமெரிக்கா மற்றும் ரஷிய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனிடையை ரஷியாவின் இந்த புதிய விண்கலம் இதுவரை இல்லாத வகையில் பூமியில் இருந்து புறப்பட்ட 3 மணி நேரத்துக்குள் விண்வெளி வீரர்களை விண்ணில் கொண்டு சேர்த்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றுள்ள இந்த 3 விண்வெளி வீரர்களும் 6 மாத காலத்துக்கு அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது.