அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி விரைவில் குணமடைய அபுதாபி பட்டத்து இளவரசர் வாழ்த்து

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆறுதல் தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டரில் நேற்று பதிவினை வெளியிட்டார்.

அதில், “அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் முதல் குடிமகள் மெலனியா டிரம்ப் ஆகியோர் விரைவில் குணமடைந்து வருவார்கள் என நம்புகிறோம். அவர்களுக்கு வாழ்த்துகள். அனைவரும் இணைந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா தொற்று நோயை வெல்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.