ஈராக்கில் பரபரப்பு – பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது.

இதையடுத்து, தங்கள் நாட்டில் இருக்கும் அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற வலியுறுத்தி ஈராக் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பிரிவினைவாதிகள் அங்குள்ள அமெரிக்க படைகளை குறிவைத்தும், தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் தொடர்ந்து ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது நேற்று முன்தினம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து 3 ராக்கெட்டுகள் விமான நிலையத்துக்கு மிக அருகில் விழுந்து வெடித்து சிதறின‌.

எனினும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. அதேபோல் விமான நிலையத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் இல்லை.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஈரான் ஆதரவு பிரிவினைவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

x