8 பெண்களை கொன்ற ‘டுவிட்டர் கொலையாளி’

ஜப்பானில் தகாஹிரோ சிராய்ஷி என்ற 29 வயது வாலிபர், 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்து மாட்டிக்கொண்டார். இவரை ‘டுவிட்டர் கொலையாளி’ என்று ஜப்பானில் அழைக்கிறார்கள்.

இவர் 2017-ம் ஆண்டு டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். சுய விவரத்தில் அவர், “ உண்மையில் வேதனையில் இருப்பவர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன். தயவுசெய்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு தகவல் அனுப்புங்கள்” என குறிப்பிட்டிருக்கிறார்.

தற்கொலை செய்து கொள்ள விரும்புகிற பெண்கள் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி கூறி வந்துள்ளார். பெண்கள்தான் எளிய இலக்கு என கருதி இருக்கிறார்.

இப்படி அவரை நாடிய 8 பெண்களை அவர் கொலை செய்திருக்கிறார். ஆனால் எப்படி கொலை செய்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஒரே ஒரு ஆணையும் கொலை செய்திருக்கிறார். அதுவும் அந்த ஆண் தனது காதலியின் இருப்பிடம் தொடர்பாக சிராய்ஷியுடன் மோதியதால், அவரை கொலை செய்துள்ளார்.

ஒரு இளம்பெண் மாயமாகி அவரை போலீஸ் தேடியபோதுதான் சிராய்ஷி பற்றி போலீசுக்கு தெரிய வந்தது. ஜூமா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது துண்டு துண்டாக வெட்டி எடுக்கப்பட்ட மனித உடல் பாகங்களை கண்டுபிடித்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இந்த தொடர் கொலைகள் ஜப்பானை உலுக்கி உள்ளன.

இப்போது சிராய்ஷி கைது செய்யப்பட்டு அவர் மீதான வழக்கு விசாரணை, டோக்கியோ கோர்ட்டில் நடந்து வருகிறது. தன்மீதான குற்றச்சாட்டுகளை கோர்ட்டில் வாசித்தபோது அவர், “ஆமாம், எல்லாமே சரியானவை” என்று கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு விசாரணையை பார்ப்பதற்காக கோர்ட்டில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அவர் கொலை குற்றத்துக்கு தண்டிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படும் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

ஆனால் அவரது வக்கீல்கள், அவரால் கொலை செய்யப்பட்டவர்கள், அதற்கு சம்மதம் தெரிவித்தவர்கள் என்பதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஒத்தி போடப்பட்டது.