சீனாவின் தேசிய நாளையொட்டி விடுமுறையை கொண்டாட அந்நாட்டு மக்கள் சுற்றுலாத்தளங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
சீனாவில் மாவோ சே-துங் தலைமையில் கம்யூனிச ஆட்சி 1949 அக்டோபர் 1-ம் தேதி உதயமானது. மக்கள் சீன குடியரசு என அழைக்கப்படும் இந்நாளை சீனா தேசிய நாளாக கொண்டாடுகிறது.
இந்த தேசிய நாளையொட்டி சீனாவில் அக்டோபர் 1 முதல் 7 நாட்கள் பொதுவிடுமுறை அறிவிக்கப்படும். இந்த நாட்களில் சீன மக்கள் சுற்றுலாத்தளங்களில் குவிவது வழக்கம்.
Related Posts
இந்நிலையில், சீன குடியரசு நிறுவப்பட்டு நேற்றுடன் 71 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலாத்தளங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதற்காக சிறப்பு ரெயில்கள், விமானங்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்தை லட்சக்கணக்கான சீனர்கள் பயன்படுத்தி தங்கள் விரும்பும் சுற்றுலாத்தளங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

தற்போது அந்நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டத்தையடுத்து எந்த வித ஊரடங்கு கட்டுப்பாட்டுகளும் இல்லாமல் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். விமான நிலையங்கள், ரெயில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சுற்றுலாத்தளங்களிலும் மக்கள் கூட்டம் பெருமளவு அதிகரித்துள்ளது. சிலர் இந்த விடுமுறை நாட்களை தங்கள் சொந்த ஊர்களில் செலவிட திட்டமிட்டு ரெயில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
உலகமே கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கை அமல்படுத்தி மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவ காரணமாக இருந்த நாடான சீனாவில் வைரஸ் குறித்த எந்த வித அச்ச உணர்வும் இன்றி அந்நாட்டு மக்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.