புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91. அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு ஆட்சி நடத்தியவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத்.

இந்த நிலையில் குவைத்தின் புதிய மன்னராக அமீர் ஷேக் சபாவின் ஒன்றுவிட்ட சகோதரரும், பட்டத்து இளவரசருமான ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா பொறுப்பேற்றுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் எம்.பி.க்களின் கரவொலிகளுக்கு மத்தியில் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா குவைத்தின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றார்.

அப்போது பேசிய அவர், “குவைத் அதன் வரலாறு முழுவதும் கடுமையான மற்றும் கடினமான சவால்களை கண்டது. ஒன்றிணைத்து ஒத்துழைப்பது மூலம் நாம் அவற்றை வெற்றி பெற்றுள்ளோம். இன்று நம் அன்பான நாடு ஆபத்தான சூழ்நிலைகளிலும் சவால்களையும் எதிர்கொள்கிறது. அது ஒற்றுமையின் மூலம் மட்டுமே சாத்தியம்” என கூறினார்.

1991-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் குவைத் மீது படையெடுத்த காலகட்டத்தில் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். போருக்கு பின்னர் அவர் சமூக நலத் துறை மந்திரியாகவும், தொழிலாளர் மந்திரியாகவும் பதவி வகித்தார். 3

அதன் பின்னர் குவைத் தேசிய ராணுவத்தின் துணை தலைவராக பொறுப்பேற்ற ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபா மீண்டும் உள்துறை மந்திரி ஆனார். அதன்பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் அவர் குவைத்தின் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.