கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் காரணமாக மரங்கள் காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது.
அத்துடன் வேகமாக வீசும் காற்றும் தீ பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான காட்டுத்தீ அணைக்கப்பட்டு விட்டாலும் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பரவி வருகிறது.
இந்த காட்டுத்தீ காரணமாக இதுவரை 3.7 மில்லியன் ஏக்கர்கள் அளவில் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. 7 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
பல இடங்களில் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுத்தீ கலிபோர்னியாவின் நபா பள்ளத்தாக்கு பகுதியில் வேகமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக அங்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.