புதுவை நகராட்சி அலுவலக திறப்பு விழாவை நிறுத்த உத்தரவு

கடற்கரை சாலையில் உள்ள புதுவை நகராட்சி கட்டிடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து பழமை மாறாமல் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு இருந்தது.

அந்த அழைப்பிதழில் முதல்-அமைச்சர் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துரை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கவர்னர் கிரண்பேடி பெயர் இதில் குறிப்பிடப்படவில்லை. தனது பெயர் குறிப்பிடப்படாதது ஏன்? என்று கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளரும், ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனருமான டாக்டர் அருணிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீண்டும் கட்டப்பட்ட புதுவை மேரி கட்டிடம் (நகராட்சி கட்டிடம்) திறப்பு விழா காண இருப்பதாக எனது கவனத்துக்கு வந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கட்டிடத்தை மீண்டும் கட்டுவதற்கு மத்திய அரசு புதுவை மாநிலத்துக்கு முழு நிதியுதவியையும் மானியமாக தந்து உதவியது.

இது மத்திய அரசினால் கடலோர பேரழிவு அபாய குறைப்பு திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்களில் ஒன்று. மத்திய அரசு கடலோர பேரழிவு அபாய குறைப்பு திட்டத்தின்கீழ் ரூ.244 கோடி உலக வங்கியிடமிருந்து கடனாக பெற்று அந்த தொகையை 100 சதவீத மானியமாக புதுச்சேரி அரசுக்கு பல பணிகளுக்காக வழங்கியது.

எனவே மத்திய அரசின் பிரமுகர்களை இந்த திறப்பு விழாவுக்கு அழைப்பதே முறையானதாகும். இதுசம்பந்தமாக தலைமை செயலாளர் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அணுகி அவர்களுக்கு உகந்த தேதியை பெறவேண்டும். அதுவரை திறப்பு விழாவானது ஒத்திவைக்கப்பட வேண்டும்.

மேலும் எதிர்காலத்தில் மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்பட்ட அனைத்து திட்டங்கள், பணிகள் திறப்பு விழாக்களுக்கு மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்கவேண்டும். இதுசம்பந்தமாக தலைமை செயலாளர் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவார்.

இவ்வாறு அந்த குறிப்பில் கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

x