பள்ளிகளை திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்துக்கேட்பு நிறைவு

கொரோனா நோய்த்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கருத்துகளை கேட்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி பள்ளிக்கல்வித்துறை தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் இருந்து கருத்துகளை பெற்று அனுப்ப அறிவுறுத்தி இருந்தது.

இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. பள்ளிகள் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை நேரில் வரவழைத்து அவர்களின் கருத்துகளை கேட்டு வாங்கினர். அதன்படி, நேற்றுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை அந்தந்த பள்ளிகள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். அவர்கள் அதனை ஒருங்கிணைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கினர். அவர்கள் பெற்றோர் தெரிவித்த கருத்துகளை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்ப இருக்கின்றனர்.

பள்ளிக்கல்வி இயக்ககம் அந்த கருத்துகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, பள்ளிகளை திறப்பதற்கு எவ்வளவு பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்? என்ற விவரங்களையும், எவ்வளவு பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்? என்ற விவரங்களையும் அரசிடம் நாளைக்குள் (சனிக்கிழமை) சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அந்த கருத்துகளின் அடிப்படையிலேயே தமிழக அரசு அடுத்தக்கட்ட முடிவுகளை விரைவில் அறிவிக்க உள்ளது.

x