ஆன்லைன் கந்துவட்டி கடன் மோசடி- சீன நாட்டினர் உள்பட 4 பேர் கைது

கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில், ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதனால் சிறுத்தொழில் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பொருளாதார இழப்பை சந்தித்தன. தனியார் நிறுவனங்களில் வேலையிழப்புகள் அதிகரித்தன. வேலையிழந்தவர்கள் பணத்தேவைக்காகவும், குடும்பத்தை நடத்தவும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆன்லைனில் கடன் செயலியை பதிவேற்றம் செய்து உடனடியாக கடன் பெறலாம் என்று கவர்ச்சி விளம்பரங்களை இணையதளங்களில் சில நபர்கள் வெளியிட்டனர்.

இதையடுத்து பல்வேறு பெயர்களில் இயங்கும் இந்த செயலிகளை பலரும் பதிவேற்றம் செய்து கடன் பெற்று வந்தனர். ஆனால் கந்துவட்டி கொடுமையைவிட ‘ஆன்லைன்’ கடன் வட்டி கொடுமை அதிகமானது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்த விவேக் (27) என்பவர் தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.4 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் அவரால் கடனை செலுத்த முடியாததால், கடன் வழங்கிய நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் விவேக்கை ஆபாசமாக திட்டி அவமானப்படுத்தினர். இதுதொடர்பான உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் அவமானம் அடைந்த விவேக் தனது கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்று ஆன்லைன் கடன் வட்டி கொடுமையால் பலர் இன்னல்களுக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை முடிவையும் நாடுகின்றனர்.

இந்தநிலையில் சென்னை வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் என்பவர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சமீபத்தில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வேலையில்லாமல் பணத் தேவைக்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். அப்போது சமூகவலைத்தளங்களில் ‘லோன் ஆப்’ (கடன் செயலி) மூலம் உடனடி கடன் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து ‘எம் ரூபி’ என்ற செயலியை பதவிறக்கம் செய்தேன்.

அப்போது என்னுடைய பான்கார்டு, ஆதார் அட்டை, புகைப்படம் போன்ற விவரங்கள் செயலில் பதிவு செய்யப்பட்டது. நான் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினேன். இதற்கு ஒரு வாரத்துக்கு ரூ.1,500 வட்டியாக பிடித்துக்கொண்டு, ரூ.3 ஆயிரத்து 500 பணத்தை எனது வங்கி கணக்கில் போட்டார்கள். ஆனால் அவர்கள் போட்ட நிபந்தனையின்படி என்னால் வட்டி கட்ட முடியவில்லை. இதனால் 45 வெவ்வேறு செயலிகளில் கடன் பெற்று செலவுக்கும், வட்டி கட்டவும் பயன்படுத்தி வந்தேன். இந்தநிலையில் என்னால் ஒரு வாரத்துக்கு வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஒருநாளைக்கு ரூ.100-க்கு 2 சதவீதம் வட்டி கட்டவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். பின்னர் தினமும் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து என்னை தொடர்பு கொண்டு ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பேசி அவமானப்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி எனது நண்பர்கள், குடும்பத்தினர் எண்களையும் தொடர்புக்கொண்டு அவமானப்படுத்தி மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே அதிக வட்டி வசூலிக்கும் ‘கடன் செயலி’யை சேர்ந்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மிரட்டல் அழைப்பின் உரையாடல் பதிவுகளையும் புகார் மனுவோடு அவர் கொடுத்திருந்தார்.

இந்த புகார் மனு மீது உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி நேரடி மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசாரும், ‘சைபர் கிரைம்’ போலீசாரும் இணைந்து புலன் விசாரணையில் களம் இறங்கினார்கள்.

போலீசாரின் தீவிர விசாரணையில் 50-க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் ‘கூகுள் பிளே ஸ்டோர்’-ல் இருப்பதும், அவற்றில் பெரும்பாலான செயலிகள் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதும் தெரிய வந்தது.

புகார்தாரர் கணேசனுக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் பெங்களூருவில் ‘ட்ரூ கிண்டில் டெக்னாலஜி பிரைவேட் நிறுவனம்’ என்ற பெயரில் இயங்கி வரும் கால்சென்டரில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அந்த கால்சென்டரில் அதிரடியாக சோதனை நடத்தினார்.

அப்போது அங்கு 110 பேர் பணி புரிவதும், பெங்களூரு சவுத் இந்திரா நகர் துப்பனஹல்லி பகுதியை சேர்ந்த பிரமோதா (வயது28) , தும்கூர் மாவட்டம் சிரா தாலுக்கா, சிக்கனஹல்லி பகுதியை சேர்ந்த சி.ஆர்.பவான்(27) ஆகிய 2 பேர் இந்த கால்சென்டரை நிர்வகித்து வருவதும் தெரிய வந்தது. கடன் செயலிகள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குறுகிய காலத்தில் உடனடி கடன் என்று ஆசை வார்த்தை கூறி, கடன் அளித்திருப்பதும், கடனை ஒரு வாரத்துக்குள் திரும்ப செலுத்தாதவர்களை இந்த கால் சென்டரில் இருந்து தொடர்புக்கொண்டு மிரட்டி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கைதானவர்களை படத்தில் காணலாம்.

இதையடுத்து பிரமோதா, சி.ஆர்.பவான் ஆகிய 2 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 லேப்-டாப், 20 செல்போன்கள், கம்பெனி தொடர்பான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களை வழிநடத்தியது சீனாவை சேர்ந்த சியாவ் யங்மாவ், ஊ யுமேன் ஒன் ஆகிய 2 பேர் என்பதும், அவர்கள் கர்நாடக மாநிலம் ஹரலூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருப்பதும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சீனர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 லேப்டாப், 6 செல்போன்கள், பாஸ்போர்ட், ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட பிரமோதா, சி.ஆர்.பவான் ஆகிய 2 பேரும் நேற்றுமுன்தினம் சென்னை அழைத்து வரப்பட்டனர். தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே போல் சீனர்கள் 2 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தனியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான சீனர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி சீனாவில் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், ‘சீனாவில் வசிக்கும் ஹாங்க் என்பவர்தான் எங்களுக்கு வழிகாட்டி. அவர் தினமும் எங்களுக்கு ஆலோசனை வழங்குவார். அதன்படி நாங்கள் பிரமோதா, சி.ஆர்.பவான் ஆகியோருக்கு உத்தரவுகளை வழங்குவோம். தினமும் 10 பேருக்கு கடன் அளிக்க வேண்டும். இந்த இலக்கை அடையாத ஊழியர்களை வார இறுதியில் பணியில் இருந்து நீக்கிவிடுவோம். இதற்கு பயந்து ஊழியர்கள் ஆசைவார்த்தைகள் கூறி, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பார்கள்’ என்று கூறினர்.

இந்த கடன் செயலிகளை நூத்தம் ராம் என்பவர் வடிவமைத்து கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்நிய நாட்டு ஆசாமிகளுடன் இணைந்து, வட்டி கொடுமையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நேரில் வரவழைத்து வெகுமதியும், நற்சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.

பின்னர் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தொழில்நுட்பம் தொடர்பான இந்த வழக்கில் கர்நாடகா மாநிலத்தில் முகாமிட்டு, துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் 2 வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்தனர். இதில் ஒரு வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 98 லட்சமும், மற்றொரு வங்கி கணக்கில் ரூ.48 லட்சமும் இருந்தது. அந்த 2 வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளோம்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சீனர்கள் 2 பேரும் ‘விசா’ காலவதியாகியும் ஓராண்டாக பெங்களூருவில் தங்கி இருந்து, இந்த கடன் செயலியை வழிநடத்தி வந்துள்ளனர். இவர்கள் கடனுக்கு 36 சதவீதம் வட்டியாக வசூலித்து வந்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சீனாவை சேர்ந்த ஹாங்க், இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார். அவரது பயணம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் பின்னணியில் நிச்சயம் பலருக்கு தொடர்பு இருக்கும். பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

சமீபத்தில் தெலுங்கானாவில் கடன் செயலி மூலம் கடன் வழங்கி மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அதில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா? என்பது குறித்து அம்மாநில போலீசாரிடம் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட 4 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ‘லேப்-டாப்’, செல்போன் மற்றும் ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவில், எத்தனை பேர் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளனர் உள்ளிட்ட தகவல்கள் தெரிய வரும்.

இந்த கும்பலுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?, இதன் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள்? உள்ளிட்ட தகவல்களை சேகரிப்பதற்காக 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம். கடன் செயலிகள் சட்டவிரோதமாக இயங்கி, தவறுதலாக பயன்படுத்தப்படுவதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்டதுறைக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

x