அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறையை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை வடக்கு மாவட்டம் – தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வைத்துக்கொண்டிருக்கிறார். நான் வகித்த பதவி தான். நான் துணை முதல்-அமைச்சராக இருந்தாலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பையும் என் கையில் வைத்திருந்தேன். ‘உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தவன்’ என்று பெயர் எடுத்தவன், இந்த அடியேன் ஸ்டாலின். ஆனால் இப்போது உள்ளாட்சித்துறை என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். அந்தளவுக்கு அந்த துறையை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்; கேவலப்படுத்தியிருக்கிறார்கள்.

உள்ளாட்சித்துறை ஊழல்களை-அக்கிரமங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமாகத்தான், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, ஒவ்வொரு ஊராட்சியிலும் சென்று, அதற்கான பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு எப்படியாவது தடை ஏற்படுத்த வேண்டும் என இங்குள்ள அமைச்சர் செயல்படுகிறார்.

இன்றைக்கு நாம் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். இதற்கு போட்டியாக நாளைக்கு ஆளும்கட்சி சார்பில் ஒரு கூட்டம் நடக்கப்போகிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவிருக்கிறார். வழியெங்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள என்னை வரவேற்க பலூன்கள் கட்டப்பட்டுள்ளன. பலூன்களை பார்த்ததும் அவரது ஞாபகம் வந்துவிட்டது. அவற்றை விரைவில் அப்புறப்படுத்திவிடுமாறு நம்முடைய தொண்டர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.

போட்டி கூட்டம் நடத்துங்கள். ஆனால், நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்வதை விட; மக்களாகிய நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் கூறக்கூடிய தெளிவு – துணிவு – தெம்பு – ஆற்றல் – அருகதை அவர்களுக்கு இருக்கிறதா? இன்றைக்கு ஊழலிலேயே கடைந்தெடுத்த ஊழல் ஆட்சி செய்திருப்பவர் அமைச்சர் வேலுமணி.

அவர் செய்திருக்கக்கூடிய ஊழல் வேறு ஒன்றும் இல்லை. மஞ்சள் நிற தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்போகிறோம் என்று ஒரு திட்டத்தை அறிவித்து, 3 ஆண்டுகளாக தொடர்ந்து கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள்.

ஊழல் புகார்களை எல்லாம் நிரூபிக்க முடியவில்லை என்றால் மு.க.ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவாரா என்று அமைச்சர் வேலுமணி கேட்டிருக்கிறார். அமைச்சர் வேலுமணி அவர்களே அதை நிரூபிக்க நான் ரெடி நீங்க ரெடியா. நீங்கள் முதலில் சொல்லுங்கள்.

நான் நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் நிரூபித்துவிட்டால் நீங்கள் அரசியலைவிட்டு ஒதுங்குங்கள். அது ஒரு பக்கம். அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டு இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சட்டத்தின் முன்னால் நிற்க வைத்து அதற்குரிய தண்டனை வாங்கித்தரும் பொறுப்பைத்தான் இந்த ஸ்டாலின் செய்யப்போகிறான்.

இங்கு, இடையே ஒரு சகோதரி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். எனக்கு தெரியும். இந்த கூட்டத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று வேலுமணி திட்டமிட்டு இந்த காரியத்தைச் செய்து இருக்கிறார். நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தை தடுக்க முயற்சி செய்தால், நாங்கள் உங்களுடைய எந்த கூட்டத்தையும் நடத்த விடமாட்டோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இது கட்டுப்பாடு உள்ள இயக்கம். அதனால் தடையாக இருந்தவரை சரியாக கண்டுபிடித்து எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியே அனுப்பிவிட்டோம். இதுதான் தி.மு.க. இன்றோடு உங்களது கொட்டத்தை அடக்கி கொள்ளுங்கள். இதேபோல தொடர்ந்தீர்கள் என்றால் நீங்கள் இல்லை, உங்கள் முதல்-அமைச்சர் கூட எங்கேயும் பேச முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் இறங்கினால் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும்.

நாட்டை பற்றி கொஞ்சம் கவலைப்படுங்கள். நாடு நன்றாக இருந்தால்தான் நாம் நலமாக இருக்க முடியும். தி.மு.க. ஆட்சியை உருவாக்க, நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

x