தி.மு.க.வுக்கு எடுத்துத்தான் பழக்கம், கொடுத்து பழக்கம் இல்லை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டத்தில், நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருவாடானை சட்டமன்ற தொகுதியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக ஏராளமான திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். அதனை நிறைவேற்றும் வகையில் 3 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவித்து தற்போது 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் வழங்கும் ஒரே அரசு இது தான்.

தமிழ்நாட்டில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 600 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. அதற்கு வங்கி இணைப்புக் கடனாக இதுவரை சுமார் ரூ.42 ஆயிரத்து 785 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் சமூக மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக எங்களுடைய அரசு கடந்த உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது.

தைப்பொங்கல் திருநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக வரும் 4-ந் தேதி (நாளை) முதல் அனைவருக்கும் ரூ.2,500, அதோடு முழுக்கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். கொரோனா காலத்தில் மக்கள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக 8 மாதங்கள் இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை போன்றவற்றை வழங்கினோம்.அதுமட்டுமல்லாது அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கினோம். தி.மு.க ஆட்சியில் இது போன்று ஏதாவது வழங்கியுள்ளார்களா? அவர்களுக்கு எடுத்துத்தான் பழக்கமே தவிர கொடுத்து பழக்கம் இல்லை. காவேரி – குண்டாறு திட்டம் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் ராமநாதபுரத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டு வேளாண் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும். விவசாயிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால், இப்பகுதி வியாபாரிகளும் முன்னேற்றம் அடைவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

x