அதிகார மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

அனைத்துக் கிராமங்களில் உள்ள அன்பிற்கினிய தமிழ் மக்களைத் தேடி ஓடிவந்து 16,500 ஊராட்சிகளிலும் கூட்டம் நடத்துகிறது திராவிட முன்னேற்றக் கழகம். கழகம் அழைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வாஞ்சை பொங்க வரவேற்பு வழங்குகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வுக்குப் பேராதரவளித்து, ஆட்சி மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்துவோம் என்று உலகறியச் சொல்கிறார்கள். “அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்” என்கிற தீர்மானத்திற்கு ஊராட்சிகளில் நூறு- ஆயிரமென உவகையுடன் கையெழுத்திட்டு மாநில அளவில் பல லட்சக்கணக்கில் என எண்ணிக்கையை உணர்த்துகிறார்கள்.

டிசம்பர் 23 அன்று 1100 என்ற அளவில் நடந்த கிராம வார்டு சபைக் கூட்டங்கள், 24 அன்று 1600-க்கும் அதிகமாக நடந்துள்ளன. எல்லா இடங்களிலும் மக்கள் ஆண்கள், பெண்கள் இளையோர், முதியோர் வந்து கூடுகிறார்கள். ஆட்சியின் அவலத்தைப் பற்றிக் குமுறுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள்.

முதல் இரண்டு நாட்களிலேயே இத்தனை வரவேற்பு என்றால், இன்னும் ஜனவரி 10 வரை இந்த ஊராட்சிக் கூட்டங்கள் நீடித்தால், மக்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க. கூட்டணி நோக்கியே சென்றுவிடக்கூடும் என்ற அச்சம், அ.தி.மு.க. ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கிறது.

200 தொகுதிகளுக்குத் துளியும் குறையாமல் வெற்றி என்பது முதல் இலக்கு. ஊழலில் திளைத்திடும் அனைத்து அமைச்சர்களில் ஒருவரும் வெற்றி பெறக்கூடாது என்பது தி.மு.கழகத்தின் இரண்டாவது இலக்கு. இரண்டும் நிறைவேறிவிடும் என்பதை உளவுத்துறையினர் கொடுத்த அறிக்கைகளும், மக்கள் காட்டும் ஆர்வமும் ஆள்வோரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. அரசியல் விபத்தில் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே நாளில் உறக்கம் நிரந்தரமாகக் கலைந்து விட்டது.

இரண்டே நாட்களில் இத்தனை பயம் வந்து இதயத்தில் கூடு கட்டிக் கொண்டதா? அரசு சார்பில், முழுமையான அளவில், எல்லா அமைப்புகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் திராணியின்றி, தேர்தல் நடைபெற்ற ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்களை நடத்தும் வக்கின்றி வழியின்றிப் போன ஆட்சியாளர்கள், தி.மு.க.வினர் மக்களைச் சந்தித்தால் அனைத்துக் கிராமங்களிலும் அதற்குப் பேராதரவு பெருகினால் தடை போடுவதா?

அ.தி.மு.க. அரசின் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து நேற்று இரவு 9 மணியளவில் உங்களில் ஒருவனான நான் பதிலறிக்கை வெளியிட்டேன். தி.மு.க.வினர் கூட்டம் நடத்தி, மக்களிடம் குறைகளைக் கேட்டு, ஆட்சியாளர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார்கள் என்றால், அ.தி.மு.க சார்பில் அதே போல ஊராட்சிகள் தோறும், வார்டுகள் வாரியாகவும் கூட கூட்டம் நடத்தி, கடந்த பத்தாண்டுகளாக நடந்த சாதனைகள் என்ன என்பதை எடுத்துரைக்கலாமே?

அதைச் செய்யும் நெஞ்ச உரமின்றி, நேர்மைத் திறனின்றி தி.மு.க. நடத்தும் கிராமசபைக் கூட்டங்களைத் தடுக்க நினைப்பது, அ.தி.மு.க. அரசின் பயத்தையும் படு பலவீனத்தையுமே காட்டுகிறது. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்தி விட முடியுமா? கிராமசபை என்ற பெயரைத்தானே கூட்டத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்?

பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவர் தலைவர் கலைஞர். ஓய்வறியா சூரியனாம் கலைஞரிடமிருந்து, உழைப்பைத் தானமாகப் பெற்றிருப்பவன் உங்களில் ஒருவனான நான். அதனால், தடைகளுக்கும், நெருக்கடிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும், பயந்து ஒதுங்கும் வழக்கம் என்பது என்னிடம் எப்போதும் கிடையாது. அண்ணாவும் கலைஞரும் கட்டிக்காத்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கும் நிலையில் இப்போதும் கிடையாது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்குத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன். அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி தி.மு.க.வை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. நாங்களும் அதிகாரத்தில் இருந்தவர்கள்; நாளை இருக்கப் போகிறவர்கள். சட்டத்தை அறிந்தவர்கள்; அதனைப் பெரிதும் மதிப்பவர்கள். பூச்சாண்டி காட்டும் விளையாட்டுகளால் தி.மு.க.வை சீண்டிப் பார்க்க வேண்டாம்.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் உங்கள் ஆட்சிக்கு எதிராகக் குமுறத் தொடங்கி விட்டனர்; எரிமலையாய்க் கொந்தளிக்கத் தொடங்கி விட்டனர். அவர்களின் வாயை மூடலாம் என நினைத்து, தி.மு.க.வின் கூட்டங்களுக்குத் தடை போட நினைத்தால், அதற்கான பதிலடியை ஜனநாயகமுறையில் நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும். அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், தி.மு.க.வின் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x