சபரிமலையில் சுவாமி ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி அளித்தார்

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. பிறகு மறுநாள் முதல் தினமும் பூஜை நடந்து வருகிறது. கணபதி ஹோமம், நெய்ய பிஷேகம், உஷபூஜை, கலசாபிஷேகம், களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலை தீபாராதனை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.

கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (சனிக்கிழமை) மதியம் நடக்கிறது.

ஒவ்வொரு வருடமும் மண்டல பூஜை அன்று சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரன்முளா கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

அதன்படி ஊர்வலமாக தங்க அங்கி நேற்று மாலை 5.50 மணிக்கு சன்னிதானம் வந்து சேர்ந்தது. அதனை, 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதை தொடர்ந்து 18-ம் படி வழியாக தங்க அங்கி கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. முன்னதாக மதியம் 1.30 மணிக்கு பம்பை வந்தடைந்த தங்க அங்கி ஊர்வலத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து மேள தாளம் முழங்க தங்க அங்கி தலைச்சுமையாக சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மண்டல பூஜை தொடர்பாக தேவஸ்தான தலைவர் வாசு கூறியதாவது:-

மண்டல பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தானம் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது, கேரள ஐகோர்ட்டு உத்தரவுகளுக்கு ஏற்ப அரசு எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட நாள் முதல் 23-ந் தேதி வரை 39 நாட்களில் சபரிமலையில் ரூ. 9 கோடியே 9 லட்சத்து 14 ஆயிரத்து 893 வருமானம் வந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சபரிமலை நடை வருமானம் ரூ. 156 கோடியே 60 லட்சத்து 19 ஆயிரத்து 661 ஆகும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக 23-ந் தேதி வரை 71 ஆயிரத்து 706 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். சபரிமலையில் இதுவரை 390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 289 பேர் ஊழியர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் தேவஸ்தான துணை ஆணையாளர் சுதீஷ், தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமார், துணை பொறியாளர் அஜித்குமார், விழா கட்டுப்பாட்டு அதிகாரி பத்ம குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

x