பெங்களூருவில் ஒரு வாரத்தில் ரூ.4 கோடி அபராதம் வசூல்

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். அதன்படி, கடந்த 13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் வசூலிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தார்கள். அதன்படி, கடந்த 13-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை ஒரு வாரத்தில் பெங்களூருவில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுளளது.

கடந்த ஒரு வாரத்தில் விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகள் மீது 78 ஆயிரத்து 754 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் அதிகபட்சமாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 23 ஆயிரத்து 847 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 14 ஆயிரத்து 499 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 4 வழக்குகளும், பி.எம்.டி.சி. (அரசு) பஸ்களை தடை செய்யப்பட்ட இடத்தில் நிறுத்தியதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் இருந்து மதியம் 1.30 மணி வரை நகரில் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களை பிடிக்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், நகர் முழுவதும் 178 பகுதிகளில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.29 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் ரவிகாந்தே கவுடா தெரிவித்துள்ளார்.