‘தேசிய தலைமை பிஸியாக இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம்’

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில், நேற்றுசெய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும்.
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும்’ என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாகியுள்ள நிலையில் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி இன்று கூறுகையில், பாஜக தலைவர் எல். முருகன் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எல்.முருகன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் பாஜக தலைமை அவரை நீக்க வேண்டியிருக்கும் என்று
தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக-பாஜக கூட்டணி இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
* பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை
* தேசிய தலைமை பிஸியாக இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
* ஜே.பி.நட்டா தமிழகம் வரும் போது அனைத்து குழப்பங்களும் தீரும்
என தெரிவித்துள்ளார்.