கட்சி தொடர்பாக வெளியான செய்தி- ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 9 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து நேற்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தேர்தல் ஆணையம் அறிவித்த கட்சிகள் மற்றும் சின்னங்கள் பட்டியல் வரிசையில் உள்ள 9 கட்சிகளில் 8-வது கட்சியாக “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது. எர்ணாவூர் பாலாஜி நகரை தலைமை இடமாக கொண்டு இந்த கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலில் அந்த கட்சியை பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் இருந்தது.

இன்று காலை ரஜினி பதிவு செய்துள்ள கட்சிதான் “மக்கள் சேவை கட்சி” என்றும் புதிய கட்சிக்கு தேர்தல் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் சின்னமாக “ஆட்டோ” தேர்வு செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. ரஜினி தரப்பில் “பாபாவின் முத்திரை” சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்றத்தினர் காத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றத்தினர் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.