தேமுதிக நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும் களத்தில் உள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. இடம்பெற்றிருந்தது. தற்போதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே அந்த கட்சி நீடிக்கிறது. இருப்பினும் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார்.

வருகிற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா? தனித்து போட்டியிடுவதா? என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதே பிரேமலதாவின் கருத்தாக இருந்து வருகிறது. இது பற்றி மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதன்படி கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் மற்றும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. வளர்ச்சிக்காக 67 மாவட்டங்களாக அந்த கட்சி பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 67 மாவட்ட செயலாளர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

2006-ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது. பின்னர் அடுத்த ஆண்டு (2011) தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் (2016) விஜயகாந்த் முதல்-அமைச்சர் வேட்பாளராக மக்கள் நல கூட்டணியில் அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் தான் 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. மீண்டும் இணைந்தது.

வருகிற சட்டமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு 4-வது தேர்தலாக அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக தே.மு.தி.க. இருந்தது. தற்போதும் அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சி என்கிற அந்தஸ்திலேயே தே.மு.தி.க. இடம்பெற்று உள்ளது.

வருகிற தேர்தலில் ரஜினி காந்த், கமல்ஹாசன் ஆகியோரும் களம் இறங்குவதால் இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது? என்பது தே.மு.தி.க.வுக்கு சவாலாகவே அமைந்துள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியிலேயே நீடித்து கணிசமான தொகுதிகளை பெற்று தேர்தலை சந்திக்கலாமா? என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் விஜயகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதே நேரத்தில் தனித்துப் போட்டியிடலாமா? என்கிற கருத்தும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்கப்பட்டது.

விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக 3-வது அணியை அமைக்கும் தகுதி தே.மு.தி.க.வுக்கு மட்டுமே உள்ளது என்று சமீபத்தில் கூறி இருந்தார். அவரது இந்த கருத்து பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் விவாதித்தார்.

ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றியும், இருவரும் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு எதிராகவே களம் இறங்கி இருப்பது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.

இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை விஜயகாந்துக்கு வழங்குவது பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

அதில்தான் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுமா? இல்லை அ.தி.மு.க. கூட்டணியிலேயே நீடிக்குமா? என்பது தெரியவரும் என்று பிரேமலதா ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

எனவே இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. தமிழகம் முழுவதும் கணிசமான அளவில் வாக்கு சதவீதத்தை கொண்டுள்ள தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றால் எத்தனை தொகுதிகளை கேட்டு பெறுவது? கொரோனா காலத்தில் பிரசார வியூகங்களை எப்படி வகுப்பது? என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் விரிவாக விவாதித்தார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பிற்பகலில் விஜயகாந்த் அல்லது பிரேமலதா விஜயகாந்த் வெளியிட உள்ளனர்.