வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்

வரும் ஜனவரி 1-ந்தேதியை வாக்காளராகும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளுக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 16-ந்தேதி வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், இடம் மாறுதல் விவரங்களை இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்காக விண்ணப்பிக்க கடந்த மாதம் 16-ந்தேதியில் இருந்து இம்மாதம் 15-ந்தேதிவரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும், சிறப்பு முகாம்கள் வழியாகவும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பங்களை அளிப்பதற்காக கடந்த நவம்பர் 21, 22-ந்தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை), டிசம்பர் 12 மற்றும் 13 (நேற்றும், இன்றும்) சிறப்பு முகாம்கள் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 3 சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதி வாய்ப்பாக இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வாக்கு சாவடிகளில் (பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில்) சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன. ஏராளமானோர் அங்கு வந்து விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். 15-ந்தேதியுடன் விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம் முடிவுக்கு வருவதால், இன்றும் பலர் விண்ணப்பங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 20-ந்தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.