பழைய 1000 ரூபாய் நோட்டுகளை கால்வாயில் வீசி சென்ற மர்ம நபர்

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி மத்திய அரசு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. மேலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட நாட்கள் காலக்கெடு விதித்தது. இதனால் பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொண்டு சென்று மாற்றினர்.

இதற்கிடையே காலக்கெடு முடிந்த பிறகு பலர் தாங்கள் வைத்திருந்த பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் குப்பைகளில் வீசிய சம்பவமும், தீவைத்து எரித்த சம்பவமும் நடந்தன.

இந்த நிலையில் கடலூரில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மர்ம நபர் கால்வாயில் வீசி சென்ற சம்பவம் நேற்று நடந்துள்ளது.

கடலூர் புதுப்பாளையத்தில் ராமதாஸ் நாயுடு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று காலை பழைய 1000 ரூபாய் நோட்டுகள் கிழிந்த படி கழிவுநீரில் மிதந்து சென்றுகொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை பார்ப்பதற்காக அந்த இடத்தில் ஒன்று திரண்டனர். மேலும் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் யாரோ மர்ம நபர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அதிகாலை நேரத்தில் கொண்டு வந்து கிழித்து கால்வாயில் வீசிச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து கால்வாயில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசி சென்ற நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.