தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை வடிவமைப்பை மாற்ற வேண்டும்

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்ட கொடிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையான குணமடைந்து, இல்லம் திரும்பவேண்டும்.

தொப்பூர் பகுதியில் அடிக்கடி நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணமாகும். இந்த வடிவமைப்பை மாற்ற ஆணையிட கோரி பா.ம.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனாலும், சாலையின் வடிவமைப்பை மாற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மறுத்து வருகிறது.

தொப்பூர் பகுதியில் இனியும் விபத்து நடக்காமல் தடுக்க, வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்து அதன் பரிந்துரை அடிப்படையில் உடனடியாக சாலை வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். தற்போதைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.