ஊட்டி மலை ரெயில் தனியார்மயமாகிறதா? தெற்கு ரெயில்வே விளக்கம்

மிகவும் பிரபலமான மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான நீராவியால் இயங்கும் மலை ரெயில் சேவை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக சமூகவலைதளத்தில் செய்திகள் பரவின.

இதில், ஊட்டி மலை ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டுவிட்டதாவும் மலைரெயில் டி.எண் 43 என பெயரிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

மேலும், சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை ரெயில் கட்டணம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து தற்போது நபர் ஒருவருக்கு 2,500 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால், சுற்றுலா பயணிகளும், ஏழை, எளிய மக்களும் மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ளமுடியாத சூழல் உருவாகியுளதாக தகவல்கள் வெளியானது. மேலும், தனியார் மயமானதால் ஊட்டி மலை ரெயிலில் தனியார் நிறுவன பணிப்பெண்கள் காவி வண்ணத்திலான உடை அணிந்திருப்பது போன்ற புகைபடங்களும் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், ஊட்டி மலைரெயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி முற்றிலும் தவறானது என விளக்கமளித்த தெற்கு ரெயில்வே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதேபோல் மலை ரெயில் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு தனியார் நிறுவனம் ஊட்டி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து திட்டமிடப்பட்ட (Chartered Trip) பயணம் சென்றது. சாதாரண பயணத்தை காட்டிலும் இது போன்று மொத்த வாடகைக்கு எடுக்கப்பட்டு இயக்கப்படும் ரெயிலின் கட்டணம்ம் கூடுதலாக இருக்கும்.

மேலும், ரெயில் பணிப்பெண்கள் காவியுடையில் இருப்பது மற்றும் ரெயின் பெயர் மாற்றப்பட்டது என வெளியான புகைப்படங்கள் தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெற்கு ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி மலை ரெயில் தற்போதுவரை தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேயின் விளக்கத்தையடுத்து, ஊட்டி மலைரெயில் தனியார்மயமாகிவிட்டது என பரவிவந்த தகவல்கள் தவறானவை என தெரியவந்துள்ளது மட்டுமல்லாமல் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.