சேலத்தில் இன்று 2 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

சேலம் பொன்னம்மாபேட்டை அருகே உள்ள வாய்க்கால் பட்டறை, வால்காடு பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (வயது 38). இவருடைய மனைவி கோகிலா (32). இவர்களது மகன்கள் வசந்தகுமார் (12), கார்த்திக்(9).

இதில் வசந்தகுமார், வாய்க்கால்பட்டறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் அவரது தம்பி கார்த்திக், 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

முருகன், கோட்டையில் உள்ள ஒரு சலூன் கடையில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்ப செலவை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்- பக்கத்தனர், முருகனின் உறவினர் ஒருவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காலை 10.30 மணிக்கு உறவினர் அங்கு வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தார். வீட்டுக்குள் முருகன், அவரது மனைவி கோகிலா மற்றும் மகன்கள் வசந்தகுமார், கார்த்திக் ஆகிய 4 பேரும் வி‌ஷம் குடித்து இறந்து கிடந்தனர்.

இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார், துணை கமி‌ஷனர் சந்திரசேகரன், உதவி கமி‌ஷனர் ஆனந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முருகனின் மூத்த மகன் மதன் குமார் (18) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்று நோய் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் இறந்தார். இந்த துக்கம் தாங்காமல் முருகன் மற்றும் அவரது மனைவி இருந்துள்ளனர்.

மகன் தங்களை விட்டு சென்று விட்டான். இனிமேல் உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் என கணவன்- மனைவி இருவரும் முடிவெடுத்துள்ளனர். அதன்படி இருவரும் முதலில் வசந்தகுமார், கார்த்திக் ஆகியோருக்கு வி‌ஷத்தை கொடுத்து விட்டு தாங்களும் வி‌ஷத்தை உட்கொண்டுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.