பல பெண்களுடன் தொடர்பில் இருந்த வழக்கு- மணப்பாறை வங்கி காசாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை மஸ்தான்தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (வயது 36). இவர் விராலிமலை வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

பின்னர் மனைவியிடம் வரதட்சணை கேட்டும், கொலை மிரட்டல் விடுத்ததோடு எட்வின் ஜெயக்குமாரின் செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தாகவும், எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தாட்சர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு வரை முன்ஜாமீன் கேட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில், சுமார் 6 மாதம் தலைமறைவாக இருந்த எட்வின் ஜெயக்குமார் கடந்த 10-ந்தேதி கைது செய்யப்பட்டு லால்குடி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் மணப்பாறை ஜே.எம். கோர்ட்டில் எட்வின் ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவரிடம் உள்ள ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவார். அத்துடன் சாட்சிகளையும் கலைத்துவிடுவார் என்று கூறி, அவருக்கு ஜாமீன் வழங்க போலீசார் ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்தனர்.

இதே போல் எட்வின் ஜெயக்குமாரின் மனைவி தாட்சர் தரப்பிலும், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறி ஆட்சேபனை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், வங்கி காசாளர் எட்வின் ஜெயக்குமாரின் ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

எட்வின் ஜெயக்குமாரின் செல்போனில் உள்ள புகைப்படங்களில் ஒரு புகைப்படம் இளம்பெண் ஒருவர் இறந்திருக்கும் நிலையில் இருப்பதாக அவரது மனைவி தாட்சர் தொடர்ந்து தெரிவித்து வருவதோடு இதுதொடர்பாக உயரதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார். இது தற்போது மீண்டும் இந்த சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.