ஆன்லைன் பாடம் புரியாததால் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

சென்னையை அடுத்த மேடவாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் கார்த்திக் (வயது 14). இவர், செம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்து வருகின்றனர். மாணவர் கார்த்திக், தனக்கு ஆன்லைனில் நடத்தப்படும் பாடம் எதுவும் புரியவில்லை. அதனால் தான் பள்ளி திறந்த பின்பு பள்ளியிலேயே சென்று படித்துக்கொள்கிறேன் என்று பெற்றோரிடம் கூறி வந்தாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று கார்த்திக்கை ஆன்லைனில் பாடம் படிக்க வைத்துவிட்டு அவரது பெற்றோர், ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டனர். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தங்கள் மகன் கார்த்திக் வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் தூக்கில் தொங்கிய மாணவர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் நேற்று மதியம் ஆன்லைனில் தேர்வு நடந்ததாக தெரியவந்தது. எனவே அதில் கார்த்திக் சரியாக தேர்வு எழுதாததால் மனமுடைந்தாரா? அல்லது ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் யாராவது கோபமாக பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்தாரா.?.

உண்மையிலேயே ஆன்லைனில் நடத்தும் பாடம் சரியாக புரியாததால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்திய செல்போனையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.