ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்தது

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது புரெவி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், திரிகோணமலையில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்தள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 75 முதல் 85 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், சில சமயங்களில் 95 கி.மீட்டர் வரைக்கும் வீசலாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலால் தென்தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிகோணமலை அருகே கரையை கடக்கும் புயல் உடனடியாக மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து அருகில் உள்ள கன்னியாகுமரி பகுதிக்கு 3-ந்தேதி நகர்கிறது. பின்பு மேற்கு- தென்மேற்கு அருகில் நகர்ந்து டிசம்பர் 4-ந்தேதி கன்னியாகுமரிக்கும் – பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் எனத் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.