தமிழ்நாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்த 25-ந்தேதி முதல் அனுமதி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதில் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்துவதற்கும் தடை விதித்து இருந்தனர்.

தற்போது தியேட்டர் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்குகளையும் திறக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதை ஏற்று தமிழ்நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

ஆனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கலை அரங்கில் 50 சதவீத இடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். ஆனாலும் அதன் உச்ச வரம்பு 200 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.

சென்னை நகரில் கலை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக இருந்தால் போலீஸ் கமி‌ஷனரிடம் இதற்கான அனுமதிபெற வேண்டும். மற்ற பகுதிகளில் மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

கொரோனா மேலாண்மை குழு வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த அனுமதி அளிக்கப்படும். அதாவது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். வெப்ப கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.