தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று காலை முதலே மழை பெய்து வருகிறது. பகல் முழுவதும் விட்டுவிட்டுப் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பாதசாரிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் மாநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்தது. இரவு நேரத்திலும் விட்டுவிட்டு பரவலாக கோவையில் மழை பெய்து வருகிறது.

இதனிடையே, குமரிக்கடல் முதல் வடதமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தென் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் அடர்த்தியான மேகக் கூட்டங்கள் திரண்டு இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் காலையில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

x