2 தடுப்பூசி போட்டும் கொரோனாவுக்கு மாணவி இறந்ததால் பெற்றோர் அதிர்ச்சி- உருமாறிய வைரஸ் பாதிப்பா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடந்த 3 மாதங்களாக கொரோனாவுக்கு யாரும் பலியாகாமல் இருந்தது ஆறுதல் அளிக்க கூடியதாக இருந்தது.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவி கொரோனா தொற்றுக்கு பலியானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதன் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்து தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் இவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.

பின்னர் மாணவியின் உடல் சுகாதாரத்துறை அறிவுரைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

மேலும் இறந்த மாணவிக்கு இணை நோய் ஏதும் இல்லை என்பதும், 2 தடுப்பூசி போட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இந்த சம்பவம் பொதுமக்களை மட்டுமில்லாமல் மருத்துவ துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதற்கிடையே அந்த மாணவிக்கு உருமாறிய வகையான பிஏ-4, பிஏ-5 கொரோனா வைரஸ் உள்ளதா? என கண்டறிய அவரது ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு அவரின் மாதிரி பரிசோதனை செய்த பிறகு அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு உருமாறிய கொரோனாவா? அல்லது கோவிட்-19 ? என்பது தெரிய வரும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.