இரண்டாவது மனைவி நடத்தையில் சந்தேகம்.. கழுத்தறுத்துக் கொன்று விட்டு கணவன் தற்கொலை

ஓசூர் அருகே இரண்டாவது மனைவி நடத்தையில் சந்தேகம் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கீழ் கொச்சாவூர் மலை கிராமத்தினை சேர்ந்த பசப்பா( வயது 40) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமான நிலையில் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் மேல் கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்த மாதேவி (வயது 32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாதேவி திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பசப்பா – மாதேவி இருவரும் கடந்த 6 மாதங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மாதேவி நடத்தையின் மீதான சந்தேகத்தால் பசப்பா அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற மாதேவி இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த பசப்பா நள்ளிரவு மாதேவியை கழுத்தறுத்து கொலை செய்து தலைமறைவானார்.

மாதேவி இறந்து கிடந்ததை காலையில் உறவினர்கள் பார்த்து அஞ்செட்டி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் குமரன் மற்றும் பொலிஸார் சம்பவயிடம் சென்று இறந்து கிடந்த மாதேவியின் சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாகயிருந்த பசப்பாவை அஞ்செட்டி பொலிஸார் தேடி வந்ததனர்.

இந்நிலையில் தனது சொந்த ஊரான கீழ் கொச்சாவூர் வனப்பகுதியில் பொலிஸ் விசாரணைக்கு பயந்து கொய்யா மரத்தில் பசப்பா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்த அஞ்செட்டி பொலிஸார் சம்பவயிடம் சென்று பசப்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்து கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.