சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்- பீதியடைந்த பொதுமக்கள்

தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டது. சென்னை கடற்கரை பகுதிகளிலும் சுனாமி தாக்கி ஏராளமானோர் பலியானார்கள். அதன் பிறகு கடலில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது.

அடிக்கடி கடல் உள்வாங்கும் போதெல்லாம் அது சுனாமியாகத்தான் இருக்குமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் திடீரென்று கடல் உள்வாங்கியது. சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை, காசிமேடு அண்ணாநகர் பகுதி ஆகிய இடங்களில் 10 முதல் 15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது.

சுமார் அரைமணிநேரத்துக்கும் மேலாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் மணல் பரப்பு அதிக அளவில் தென்பட்டது. நள்ளிரவில் கடற்கரைக்கு வந்த பொதுமக்களும் பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்தவர்களும் கடல் உள்வாங்கியதை பார்த்து கடும் பீதி அடைந்தனர்.

சுமார் அரைமணிநேரம் கழித்து கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அதேநாளில் புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரியிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அதன்பிறகு இந்தியாவுக்கு சுனாமி பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் கடல் உள்வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.