118 ஆண்டுக்கு முன்பு வந்ததையும் தாண்டி புதிய வரலாறு படைத்த பாலாற்று வெள்ளம்

தமிழகத்தின் வடமாவட்டங்களின் விவசாயத்தை வளமாக்கி ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணித்து வயலூர் முகத்துவாரத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரமடைந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கரையை கடந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் பாலாறும் அதன் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகபட்ச அளவை எட்டியது.

ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணித்து பாலாற்றுடன் கலக்கும் நீவா என்ற பொன்னை ஆற்றில் 1930-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 60,000 கன அடிக்கு நீர்வரத்து இருந்தது.

இந்த ஆற்றில் இன்று அதிகாலை முதல் மீண்டும் 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பொன்னை தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.

இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை பாலத்துக்கு கீழே தண்ணீர் சென்றதால் பாலத்தில் நடந்து செல்ல மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதுதான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

மரத்தின் ஒரு பகுதியில் தூண்கள் அப்படியே இறங்கி உள்ளது. தொடர்ந்து பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பொன்னை ஆற்றின் மேற்கு கரைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு வசிக்கும் மக்கள் அன்றாட தேவைக்கும் அலுவலகங்கள் ஆஸ்பத்திரி என அனைத்துக்கும் பொன்னை தான் வரவேண்டும்.

பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருப்பதால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1855-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான அணைகளில் ஒன்றாகும். அணையின் உயரத்தைவிட 3 அடி அளவுக்கு வெள்ள நீர் பாய்ந்தோடியது.

தமிழகத்தில் 222 கி.மீ பயணிக்கும் பாலாற்றில் வாலாஜா அருகே 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அணை கட்டும் பணியை தொடங்கினர். 1858-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அணையில் 4825.2 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் 14,309 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

சுமார் 163 ஆண்டுகள் பழமையான அணையை கடந்து நேற்று முன்தினம் உச்சபட்ச அளவாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 54 கன அடி நீர் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கடந்துள்ளது.

பாலாற்றின் கிளை நதிகளான அகரம் ஆறு, மலட்டாறுகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து 16 ஆயிரம் கன அடிக்கு மேல் சீறி பாய்ந்து வரும் வெள்ளம் பாலாற்றில் கலந்து ஓடுகிறது.

பொன்னை ஆறு, பாலாறு சந்திக்கும் இடத்தில் கடல் போல் காட்சியளிக்கிறது. ராணிப்பேட்டை பாலாற்றில் இன்று காலை சுமார் 70 ஆயிரம் கன அடி வெள்ளம் பாய்ந்து ஓடி சென்றது.

1903-ம் ஆண்டு 504.23 கன அடி வெள்ளத்தால் பாலாறு அணைக்கட்டு சேதமடைந்துள்ளது. இதை 1905-ம் ஆண்டு சரி செய்துள்ளனர். 1903-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வாணியம்பாடி நகரம் நீரில் மூழ்கியதுடன் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

திடீர் வெள்ளத்தால் பாலாறு வாணியம்பாடி நகரில் மூன்றாக பிரிந்து மீண்டும் ஆம்பூர் அருகே ஒன்றாக சேர்ந்து அகண்ட பாலாறாக பயணிக்கிறது. பெருவெள்ளத்தால் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்தனை தரைப்பாலங்களும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

1903-ம் ஆண்டு வந்த பெரு வெள்ளத்தையும் தாண்டி 118 ஆண்டுக்கு பிறகு பாலாற்று வெள்ளம் புதிய வரலாறு படைத்துள்ளது.

பாலாற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் பெருவெள்ளத்தை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். பாலங்களில் நின்று குழந்தைகளுடன் செல்பி எடுத்து வருகின்றனர். இது போன்ற வேடிக்கை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொன்னையாற்றில் 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கமண்டல மகாநதியில் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுவதால் பாலாற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.