தொடரும் கன மழை எதிரொலி சென்னையில் 59 விமானங்கள் தாமதம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது.

பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் ஓடுவதால் வாகனங்கள் நீரில் ஊர்ந்து செல்கின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றது.

சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற விமானங்கள் ஒரு மணி நேரம் வரையிலும், உள்நாட்டு விமானங்கள் 30 நிமிடங்கள் வரையிலும் தாமதமாக சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள் குறித்த நேரத்திற்கு வந்தடைந்ததாக கூறியுள்ளனர். பலத்த மழை காரணமாக பயணிகளின் உடமைகள், உணவு பொருட்களை ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னையில் இருந்து சென்ற விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 சா்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, துபாய், கத்தார், ஓமன், குவைத், இலங்கை, லண்டன், டாக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் 13 சா்வதேச விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்தது ஒரு மணி நேரம் வரையிலும், அதைப்போல் உள்நாட்டு விமானங்களான கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூா், கொச்சி, கோழிக்கோடு, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, அந்தமான், கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 46 உள்நாட்டு விமானங்கள் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரையிலும் தாமதமாகவும் புறப்பட்டு சென்றது.

ஆனால் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் வெளிநாடுகள், வெளியூா்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்து தரையிறங்குகின்றது.

மேலும் சென்னை மாநகா், வட சென்னை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மீனம்பாக்கம் பகுதிகளில் மழையின் அளவு குறைவு. எனவே, சென்னை விமானநிலைய ஓடுபாதைகளில் மழைநீா் தேங்கி நிற்கவில்லை. இதனால், விமான சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

ஓடுபாதையில் உள்ள நீர் தேக்கத்தை அகற்ற ஆறு பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விமான நிலையத்தில் உள்ள அனைத்து அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் ரேடார் ஆகியவை இதுவரை பாதிக்கப்படவில்லை என கூறினர்.

2015 ஆம் ஆண்டில், சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது, 1,500 பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர் மற்றும் 22 விமானங்கள் நீரில் மூழ்கின; 17 இடங்களில் விமான நிலைய எல்லைச் சுவர் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க ஓடுபாதைக்கு அருகில் உள்ள அடையாறு ஆற்றின் தூர்வாருதல் மற்றும் விமான நிலையத்தின் அண்டை பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.