தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை 69-வது பிறந்தநாள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை 69-வது வயது பிறக்கிறது. இதையொட்டி கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

விஜயகாந்த் பூரண நலமுடன் இருக்க பல்வேறு கோவில்களில் சிறப்புப் பூஜைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

தங்களது பகுதிகளில் அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கவும், கட்சியினர் முடிவு செய்துள்ளனர். தனது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வரும் விஜயகாந்த், அன்றைய தினம் ‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே’ என்கிற கொள்கையின் அடிப்படையில் ஏழைகளுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் பிறந்தநாளை தே.மு.தி.க.வினர் கடந்த 15 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறார்கள். ஒவ்வெரு ஆண்டும் தனது பிறந்தநாளின் போது கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் என்றும், தங்களது பகுதிகளிலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை மக்களுக்கு செய்து பிறந்தநாளை கொண்டாடுங்கள் என்றும் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாளை கட்சி அலுவலகத்தில் எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறினார்கள்.

செங்கல்பட்டு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அனகை முருகேசன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி பிரபாகரன், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வி.சி.ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட செயலாளர்களும் தங்களது பகுதிகளில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நாளை நலத்திட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.