மத ஒற்றுமையை வலியுறுத்திய ஆதீனம் அருணகிரிநாதர்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நேற்று மரணம் அடைந்தார்.

அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தருமபுர ஆதீனத்தின் சீடராக இருந்து அங்கு பயிற்சி பெற்றார். பின்னர் அவர் 1975-ம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளவரசாக பதவி ஏற்றார்.

1980-ம் ஆண்டு மதுரை ஆதீனமான சோமசுந்தர தேசிகர் மரணம் அடைந்த பிறகு மதுரை ஆதீனமாக பதவியேற்றார்.

சைவ சமய நெறியை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும், அனைத்து மத மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது தலையாய கொள்கையாக இருந்தது. இதை அவர் தன் இறுதி மூச்சு உள்ளவரை கடைபிடித்தார். இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய மேடைகளிலும் உரையாற்றியுள்ளார்.

திருஞான சம்பந்தரின் பாடல்களை எளிமையான வகையில் பொருளோடு அச்சிட்டு இலவசமாக வழங்க வேண்டும் என்பதும், ஆதீனத்தின் சார்பில் தரமான கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடலுக்கு திருவாவடுதுறை ஆதீனம் அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.

பாண்டிய நாட்டிற்கு சொந்தமான மதுரை ஆதீன மடத்திற்கு சோழ நாட்டில் 4 கோவில்கள் இருப்பது சிறப்பாகும்.

சைவ சித்தாந்தங்களோடு விளையாட்டு, பத்திரிகை என பல்வேறு துறைகளில் ஆர்வமுடன் இருந்த மதுரை ஆதீனத்திற்கு மோட்டார் சைக்கிள் மீது ஆர்வம் அதிகமாக இருந்ததால் தான் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை கடைசிவரை பாதுகாத்து வந்தார்.

ஆன்மிகத்தோடு அரசியலிலும் ஈடுபாடு கொண்ட மதுரை ஆதீனம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் நட்புடன் இருந்து வந்தார். மேலும் மூப்பனார், நாகூர்அனிபா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் நட்பு பாராட்டினார். அவ்வப்போது தேர்தல் பிரசாரமும் மேற்கொண்டவர்.

மதுரை ஆதீன மடத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. மேலும் தெற்கு ஆவணி மூலவீதியில் ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவையடுத்து 293-வது ஆதீனமாக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பதவி ஏற்க உள்ளதாக ஆதீனமட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.