வரும் 7ம் திகதிக்கு காத்திருக்கும் அமைச்சர்கள்..! எடப்பாடி உத்தரவு போட்டாரா..?

வரும் 7ம் திகதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனிக்குச் சென்றுள்ளார். அதேநேரம், மற்ற அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் சென்னையிலே டேரா போட்டிருக்கின்றனர்.

திடீரென நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 6ம் தேதி சென்னைக்கு வரவேண்டும் என்று ட்வீட்டர் அழைப்பு வெளியானது. இது உண்மைதானா என்று புரியாமல் அத்தனை பேரும் தவித்தனர். அதன்பிறகு அந்த ட்வீட்டர் அழிக்கப்பட்டது.

அதேபோன்று இப்போது, 7ம் திகதி வரையிலும் அமைச்சர்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. இது உண்மை என்பது போலவே அத்தனை அமைச்சர்களும் சென்னையை சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

அமைச்சர்களிடம் கேட்டபோது, ‘நேரடியாக எங்களுக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை, ஆனால் நம்பகமான ஆட்கள் மூலம் அழைப்பு வரலாம் என்று சொல்லப்படுவதாலே சென்னையில் இருக்கிறோம்’’ என்கிறார்கள்.

எப்படி என்றாலும், ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக இப்போதே அறிவிக்க வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலான அமைச்சர்களின் எண்ணமாக இருக்கிறது. அப்போதுதான், கூட்டணி விவகாரம் குறித்தும் முன்கூட்டியே முடிவெடுத்து தேர்தல் வேலைகளை பார்க்க முடியும் என்கிறார்கள்.

அப்படியே நடக்கும் என்று நம்புவோம்.