தனி விமானத்தில் பறந்து பிரசாரம் செய்யும் தலைவர்கள்

தேர்தல் களம் என்பதால் கட்சி தலைவர்கள் பிரசாரத்துக்காக அவசர பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே நேரத்தை மிச்சம் பிடிப்பதற்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் குட்டி விமானங்களை வாடகைக்கு அமர்த்தி பயணம் செய்கிறார்கள்.

இதற்காக சென்னை பழைய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர்களும், விமானங்களும் அணிவகுத்து நிற்கின்றன. தலைவர்கள் அவற்றை வாடகைக்கு எடுத்து பறக்கிறார்கள்.

நேற்று கமல்ஹாசன் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார்.

இதேபோல அரசியல் தலைவர்கள் பயணத்துக்காக பலவகையான வசதிகளை கொண்ட ஹெலிகாப்டர்களும், விமானங்களும் காத்திருக்கின்றன. 6 இருக்கை கொண்ட விமானத்தில் பயணம் செய்ய நிமிடத்திற்கு ரூ.1017 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

7 இருக்கை கொண்ட விமானத்தின் ஒரு நிமிட கட்டணம் ரூ.3270 ஆக உள்ளது. 14 இருக்கை கொண்ட பெரிய விமானத்திற்கு நிமிடத்திற்கு ரூ.7,194 வசூலிக்கப்படுகிறது. மேலும் விமானத்திற்கு மணிக்கணக்கில் பார்க்கும்போது ரூ.61 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 700 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி. மற்றும் தரை இறங்குதல் கட்டணம் ஆகியவை இதில் அடங்கும். டீலக்ஸ் விமானங்களும் வாடகைக்கு கிடைக்கின்றன. அவற்றிற்கான கட்டணம் நிமிடத்திற்கு ரூ.2543 ஆகும்.

கொரோனா காலம் என்பதால் விமானத்தில் சமூக இடைவெளியுடன் மற்ற பல விதிகளையும் பின்பற்ற வேண்டும். மேலும் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சோதனை செய்வார்கள்.

x