பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு- 6 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வந்தன.

இங்கு அன்பின்நகரம், ஏழாயிரம் பண்ணை, படந்தால், மேட்டுப்பட்டி, மார்க்கநாதபுரம், அச்சன்குளம், சல்வார்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் வேலை செய்துவந்தனர்.

நேற்று 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். இந்தநிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன.

அந்த அறைகளில் பணியாற்றிய பலர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டும், உடல் கருகியும் பிணமாக கிடந்தனர். மேலும் பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்களும், ஆலையில் மற்ற அறைகளில் பணியாற்றியவர்களும் மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.

உயிருக்கு போராடியவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு, சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலியானவர்கள் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த சம்பவத்தில் 19 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர்கள் சக்திவேல், சிவகுமார், பொன்னுப்பாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலை குத்தகைதாரர்கள் ராஜா, வேல்ராஜ் மீதும் ஏழாயிரம் பண்ணை போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

x