புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு தினந்தோறும் 7 டன் பசுந்தீவனங்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் புத்துணர்வு சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.

முகாமில் 26 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. யானைகளுக்கு காலை, மாலை என 2 வேளையும் நடைபயிற்சி, ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளியல் மேடை, ‌ஷவர் மேடைகளில் ஆனந்தக் குளியல் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது.

அதன் பின்னர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சமச்சீர் உணவு மற்றும் கூந்தல் பனை, சோளத்தட்டு, பசும்புல் கரும்பு, தென்னை மட்டை உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூந்தல் பனை, சத்தியமங்கலம், அந்தியூர், அத்தாணி, கோபி ஆகிய பகுதிகளிலிருந்து பசும்புல், சோளத்தட்டு, தென்னைமட்டை, மதுரையிலிருந்து கரும்பு உள்பட 7 டன் பசுந்தீவனங்கள் தினமும் வரவழைக்கப்படுகிறது. முகாமில் உள்ள யானைகள் அனைத்தும் கூந்தல் பனையை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றன. அதற்கு அடுத்தபடியாக சோளத்தட்டை உண்பதில் அதிகம் விருப்பம் காட்டுகின்றன.

x