காஷ்மீராக மாறிய கொடைக்கானல்- கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மழையைத் தொடர்ந்து கடும் உறைபனி நிலவி வருகிறது. இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய உறைபனி நாளுக்குள் நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

டிசம்பர் மாத இறுதி, ஜனவரியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பிப்ரவரியிலும் கடும் உறைபனி நிலவி வருகிறது.

நேற்று பகல் பொழுதில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மாலை 4 மணிக்கே பனிப்பொழிவு அதிகரிப்பதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

மன்னவனூர் ஏரி, ஜிம்கானா நீர்பிடிப்பு பகுதி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதனால் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மன்னவனூர் சூழல் சுற்றுலா தளத்தில் புல்வெளியில் வெள்ளைக் கம்பளம் விரித்ததுபோல் பனி படர்ந்து காணப்பட்டது. செடி, இலைகளில் வெண் முத்துக்களாக ஐஸ்கட்டிகள் ரம்யமாக காட்சி அளித்தது.

இதனால் காஷ்மீர்போல் கொடைக்கானல் மாறிவிட்டதோ? என பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர். மலை கிராமங்களான கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மலை வாழைகள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர் பனிப்பொழிவால் அனைத்து தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

x