3 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 3 உபகுழுக்கள்

ஒட்டுமொத்த நீதிக் கட்டமைப்பில் பாரிய சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணியில் நிபுணர்கள் குழு செயற்பட்டுக்கொண்டிருக்கும் அதேநேரம், தண்டனை சட்டம், சிவில் சட்டம் மற்றும் வர்த்தக சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பூரணகால 3 உபகுழுக்கள் செயற்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

குற்றவியல் நீதிக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் ஆராயும் நோக்கில் நேற்று 11 ந் திகதி நடைபெற்ற நீதி அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழுவிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமும், முன்னாள் நீதித்துறை அதிகாரியுமான டிகிரி கே.ஜயதிலகவின் முன்வைத்தைலைத் தொடர்ந்து சமுதாயஞ்சார் சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. தண்டனை சட்டம் மற்றும் நீதியின் எண்ணக்கரு என்பன ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுடன், ஒரு நபரை குற்றவாளி என முத்திரை குத்துவதைவிட பொறுப்புள்ள பிரஜையாக சமூகத்தில் ஒப்படைப்பது முக்கியமானது என உதவி செயலாளர் நாயகம் குழுவில் தெரிவித்தார்.

இந்த இலக்கை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டு சக்கரங்களின் ஊடாக அடைய முடியும் என்றும் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். முதலாவதாக தேவையான சீர்திருத்தங்களை நோக்கிக் கொண்டு செல்வதற்கான அரசியல் தலைமைத்துவத்தை உள்ளடக்கிய அரசியல் சக்கரம் காணப்படுகிறது. இரண்டாவது சக்கரமாக உரிய மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு பல்வேறு துறைகளில் தமது நிபுணத்துவத்தை வழங்குவதற்கான துறைசார் விற்பன்னர்கள் மற்றும் அதிகாரிகள் காணப்படுகின்றனர் என்றார்.

தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த பங்களிப்புச் செலுத்தக் கூடிய அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வதே அமைச்சின் எதிர்பார்ப்பு என அமைச்சர் அலி சப்ரி இங்கு தெரிவித்தார்.

அத்துடன், கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் சாதாரண சூழ்நிலையில் 11,000 பேருக்கு மாத்திரமே இருக்கக் கூடிய இடத்தில் ஏறத்தாழ 30,000 முதல் 33,000 பேர் சிறையில் இருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஏறத்தாழ 8,000 பேர் மாத்திரமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் தடுப்புக்காவலில் உள்ளனர். 90 வீதமானவர்கள் அல்லது விளக்கமறியலில் உள்ள அதிகமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள், போதையுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் அல்ல என்றார்.

2018-2019 ஆம் ஆண்டு அரசாங்க இராசயனப் பகுப்பாய்வுத் திளணக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி 114 வழக்குகள் மாத்திரமே தூய்மையான போதைப் பொருள்களை வைத்திருந்தமை தொடர்பானவை என அமைச்சர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 99 வீதமானவர்கள் ஏறத்தாழ 3,300 பேர் 2.5 கிராம் போதைப் பொருளை வைத்திருந்தவர்களாகும். இதுபோன்ற சிறிய வழக்குகளால் பாரிய போதைப்பொருள் குற்றச்செயல்கள் குறிந்த வழக்குகள் மேல் நீதிமன்றத்தில் எவ்வாறு தேங்கியுள்ளன என்பதையும் அமைச்சர் விளக்கினார்.

அதேநேரம், போதைக்கு அடிமையானவர்களை பாரிய போதைப்பொருள் குற்றவாளிகளுடன் இணைவதற்கு அனுமதித்து அவர்களை பாரிய போதைப்பொருள் குற்றவாளிகளாக்குவதைவிட, சமுதாயஞ்சார் சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வர்த்தகப் பெறுமதி மிக்க இடங்களில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலை, பெண்கள் சிறைச்சாலை மற்றும் புதிய மகசின் சிறைச்சாலை என்பவற்றை தற்பொழுதிருக்கும் அளவைவிட 10 மடங்கு விஸ்தீரனம் கொண்டதாக ஹொரணையில் அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை 250 ஏக்கர் நிலப்பரப்பை வழங்கியிருப்பதாகவும், சிறைச்சாலைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

அரசாங்க இராசயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திலிருந்து அறிக்கைகள் கிடைப்பதில் கணிசமானளவு காலதாமதம் ஏற்படுவதால் நீதி மன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இங்கு குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதி அமைச்சர் இதனைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறினார்.

x