ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

நீதி மன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 4 வருடகாலம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரையிலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தற்பொழுது உள்ள நிலைமை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைவாக முன்னர் அறிவிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை மேலும் நீடிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்வதை தடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த ரீட் மனுவை கவனத்தில் கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிபதிகளான அர்ஜூன உபசேகர, சோகித்த ராஜகருண ஆகியோர் மத்தியில் இந்த மனு இன்று 11ம் திகதி ஆராயப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஆ. சுமந்திரன் மனுதாரரின் சார்பில் ஆஜராகியுள்ளள ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர முஸ்தப்பா சுகயீனம் உற்ற நிலையில் இருப்பதினால் வேறொரு தினத்தை வழங்குமாறு கோரினார்.

மனு தொடர்பில் மேலதிக விடயங்களை மார்ச் மாதம் 16 ஆம் திகதி ஆராய நீதியரசர் குழாம் தீர்மானித்தது. மரண தண்டனை குற்றஞ்சாட்டில் குற்றவாளியான மரண தண்டனை விதிக்கப்படடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் 64 (ஊ) சரத்திற்கு அமைவாக பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு செல்வதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

x