மகாவலி அதிகார சபை தமிழர்களை அழிக்கின்ற அமைப்பா?

உலக வங்கி மகாவலி அதிகார சபைக்கு நிதி உதவி வழங்கி மயிலத்தமடு மாதவனை பகுதியில் இனவாத அடிப்படையிலே தமிழர்களை அழித்து தமிழர்களுடைய பொருளாதாரத்தினை அழித்து சிங்கள பேரினவாத குடிப்பரம்பலை ஏற்படுத்துவதற்கு தான் துணைபோகின்றார்களா என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

மகாவலி அதிகார சபை என்பது சிங்களவர்களை மட்டும் வாழ வைக்கின்ற தமிழர்களை அழிக்கின்ற அமைப்பா என்ற கேள்வியை நான் கேட்ட விரும்புகின்றேன்.

ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் நடேசன் அறக்கட்டளை அமைப்பின் ஊடாக வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுங்கான்கேணி, கிண்ணையடி ஆகிய கிராமத்தில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மயிலத்தமடு மாதவனை பகுதியில் எட்டாயிரம் ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கள விசாயிகள் என்று சொல்வர்களால் பலவந்தமாக காணிகள் பிடிக்கப்படுகின்றது. திடீரென வந்து ஒரு பகுதியினை பிடித்து தங்களுடைய பகுதி என்று பிரகடனம் செய்கின்றார்கள். பின்னர் பண்ணையார்களிடம் சொல்கின்றார்கள் மூன்று நாட்களுக்குள் இந்த பகுதியை விட்டு செல்ல வேண்டும் என்றும் இல்லையெனில் உங்களை வெட்டுவோம், மாடுகளை கொலை செய்வோம் என்று சொல்கின்றார்கள்.

வெளியேறாத விடத்து மாடுகளை கொலை செய்கின்றார்கள். மக்களை அடித்து அச்சுறுத்துகின்றனர். அச்சத்தின் காரணமாக பண்ணையாளர்கள் வெளியேறுகின்றார்கள். இதன்பிற்பாடு அக்காணியை துப்பரவு செய்கின்றார்கள். இதற்கு மகாவலி அதிகார சபை முழுமையாக துணை நிற்கின்றது. எட்டாயிரம் ஏக்கர் காணியில் சோளம், நெல் செய்கை செய்யப்படுகின்றது. மகாவலி அதிகார சபைக்கு உலக வங்கி நிதி உதவி வழங்கி வருகின்றது.

உலக வங்கி மகாவலி அதிகார சபைக்கு நிதி உதவி வழங்கி இங்கு இனவாத அடிப்படையிலே தமிழர்களை அழித்து தமிழர்களுடைய பொருளாதாரத்தினை அழித்து சிங்கள பேரினவாத குடிப்பரம்பலை ஏற்படுத்துவதற்கு தான் துணைபோகின்றார்களா என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

பொலனறுவை மாவட்டத்திற்குள் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வந்து எங்களது பண்ணையார்களை விரட்டி விட்டு அங்கு பயிர் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. ஏன் அந்த இடத்தில் தமிழ் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு காணிகளை வழங்கி ஏன் செய்கை செய்திருக்க முடியாது. மகாவலி அதிகார சபை என்பது சிங்களவர்களை மட்;டும் வாழ வைக்கின்ற தமிழர்களை அழிக்கின்ற அமைப்பா என்ற கேள்வியை நான் கேட்ட விரும்புகின்றேன். அதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிங்கள மக்கள் இந்த மகாவலி அதிகார சபையினால் நன்றாக வழி நடாத்தப்படுகின்றார்கள். தமிழ் பண்ணையார்களுக்கு எதிராக ஏவப்படுகின்றார்கள். அதனூடாகவே எங்களது பண்ணையாளர்கள் தாக்கப்படுகின்றார்கள். மாடுகள் அழிக்கப்படுகின்றன. ஆகவே இந்த செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஐநா மற்றும் சர்வதேச நிறுவனங்கள் குறித்த விடயத்தினை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம் எங்கள் மக்கள் மீது மேற்கொண்டு வந்த யுத்த, இனஅழிப்பு, மனித குலத்து எதிரான குற்றங்கள் தொடர்பிலே முழுமையாக ஒரு சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்பட்டு படுகொலைகளுக்கு சர்வதேச நீதி பெற்றுக் கொள்ளப்பட்ட வேண்டும். தங்கள் கிராமத்திலும் இலங்கை இராணுவம் அவர்களோடு இணைந்து இயங்கி துணை இராணுவ குழுக்களாலும் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் கடந்த காலத்தில் நடைபெற்றுள்ளது.

தென் தமிழ் ஈழ மண்ணிலே கிராமத்திலுள்ள பல நூற்றுக்கணக்கானவர்கள் குடும்பத் தலைவர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் கடந்த முப்பது வருடங்களில் நடந்தேறியுள்ளது. தமிழர்கள் என்ற ஒரெயொரு காரணத்திற்காகவே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றது. எமது மக்களை பிரதேசங்களில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இலங்கை அரச படைகள் அரசாங்கத்தின் திட்டத்தின் அடிப்படையில் இவ்வாறான படுகொலைகளை மேற்கொண்டார்கள்.

இலங்கை ஆயுதப் படையினரும், பொலிஸாரும் படுகொலை செய்கின்றவர்களை பாதுகாக்கின்றவர்களாகத் தான் இருந்துள்ளார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கின்றவர்களாக செயற்படவில்லை. அரச படைக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சனைகள் வருகின்ற பொழுது அரச பக்கமும், பெரும்பான்மை இனத்தின் பக்கமும் தான் இருந்துள்ளார்களே தவிர ஒரு போதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பக்கம் இருந்திருக்கவில்லை. இதற்காகவே தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தார்கள்.

ஆயுத போராட்டம் பயங்கரவாத போராட்டம் என்ற போர்வையில் எங்களுடைய இனத்தினை அழிக்கின்ற செயற்பாட்டைத்தான் இந்த அரசாங்கம் செய்து முடித்துள்ளது. இந்த அழிப்புக்கு நாங்கள் நீதி பெற்றேயாக வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும் என்பதில் எங்களது தலைமைத்துவம் உறுதியாக இருந்து செயல்படுகின்றது.

இலங்கை ஒரு ஒற்றையாட்சி கட்டமைப்பை கொண்டுள்ளது. பெரும்பான்மையினர் தான் நாட்டினுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் தான் தமிழர்களுக்கு தொடர்ச்சியாக கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நெருங்கடியில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டுமாக இருந்தால் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி வேண்டும்.

கடந்த அரசாங்கமும் ஒரு அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத்தில் வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஏனையவர்களும் ஒற்றையாட்சி தமிழர்களுக்கான தீர்வாக கொண்டு வருவதற்கு துணை நின்றார்கள். அந்த அரசாங்கத்திற்கும் மகிந்த தரப்பு அரசாங்கத்திற்கும் இடையில் இருந்த இழுபறி காரணமாக அரசியலமைப்பு வேலைகள் கிடப்பில் போடப்பட்டு இப்போது இந்த அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டிலே தான் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்திற்கும் முண்டு கொடுக்கின்ற நிலைப்பாட்டிலேதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, வியாளேந்திரன் போன்றவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த பத்து வருடங்களாக நாங்கள் எதனை வலியுறுத்தி வருகின்றோமோ, அதுபோல் கடந்த அறுபது வருடங்களாக தமிழரசுக் கட்சி எதனை வலியுறுத்தி வந்தததோ அந்த நிலைப்பாட்டை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

நாங்கள் மட்டுமே தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தேவை வேண்டும் என்ற நிலைப்பாட்டினை வலியுறுத்தும் தரப்பாக நாங்கள் இருக்கின்றோம். ஏனைய தரப்புக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ளும் தரப்பாகவே இருக்கின்றது என்றார்.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கனகரெத்தினம் சுகாஷ், கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், கட்சியின் முக்கியஸ்தர் க.குககுமாரராசா, பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்

இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுங்கான்கேணி, கிண்ணையடி ஆகிய கிராமத்தில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

x