குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்

பாரிய ஊழல் வழக்குகளின் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்றமையானது நீதித்துறை முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையை மோசமாக பாதிக்கும் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் (TISL) நம்புகின்றது. அரசியல்வாதிகளுக்கும் புலனாய்வாளர்களுக்கும் இடையிலான முறையற்ற தொடர்புகள் உட்பட கடந்தகால சம்பவங்கள் விசாரணைகளின் போது பக்கச்சார்பின்மை மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு, அரசியல் அதிகார மையங்கள் தனித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர குறிப்பிடுகையில், ‘சாட்சிகள் தமது சாட்சியங்களை மாற்றி சமர்ப்பித்ததன் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் மீதான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை நாம் அண்மைக்காலங்களில் அவதானித்துள்ளோம். இவ்வாறான குற்றச்சாட்டுகள் முக்கிய கவனத்திற்குட்பட வேண்டும் என்பதுடன், அதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக பொறுப்புவாய்ந்த அதிகாரசபைகள் விரைந்து செயற்பட வேண்டுமெனவும்’ அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அவலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ள பொலிஸ் பொறுப்புகூறல் மேற்பார்வை மற்றும் நேர்மை குறித்த கையேட்டில் குறிப்பிடப்பட்டவாறு, ‘நேர்மைத் தன்மையை விட விசுவாசத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு கலாசாரம் மூடிமறைக்கும் தன்மையினால் முறைதவறான நடத்தைக்கு வழிவகுக்கின்றது. பொலிஸின் நேர்மைத் தன்மையை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கு திறந்த கலாச்சாரத்தை தூண்டுவதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

TISLன் க்ளோபல் கரப்ஷன் பேரொமீட்டர் 2019 (Global Corruption Barometer: Sri Lanka2019)அறிக்கையின் படி, 73% பொதுமக்கள் நீதித்துறை மேல் நியாயமானநம்பிக்கையை அல்லதுஅதிக நம்பிக்கையை கொண்டுள்ள அதேவேளை 57% பொதுமக்கள் பொலிஸ் துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

ஒபேசேக்கர அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், ‘பொலிஸ் விசாரணைகள் மற்றும் வழக்கு நடைமுறைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு, நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைய பொலிஸின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதானது மிகவும் முக்கியமானது. இது எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி இடம்பெறுவதும் மிகவும் அவசியமாவதோடு, அவ்வாறு நடைபெறாதவிடத்து இந்த பொறுப்புக்கூறலின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாவதற்கு அது காரணமாக அமையும்.

இறுதியாக, பொலிஸ் அதிகாரிகளுக்கெதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அரசியல் நோக்கமற்றதாக இருப்பதும் முக்கியமானது. அவ்வாறு அமையுமாயின் அதன் பாதக விளைவுகள் விசாரணை அதிகாரிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக அமைவதோடு அவ்வதிகாரிகள் அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது மேற்கொள்ள எத்தனிக்கும் விசாரணைகளையும் தாழ்த்தக்கூடியதாக அமையும்.