நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 549 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 603 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 530 பேர் அடங்குவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 890 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் நாடு திரும்பிய 19 பேருக்கு கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஜோர்தானில் இருந்து இலங்கை வந்த 18 பேரும், நாடு திரும்பிய கடலோடி ஒருவரும் அடங்குகின்றனர்.

8 ஆயிரத்து 188 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், நேற்றைய தினம் 520 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் 33 ஆயிரத்து 221 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, காவல்துறையில் கொவிட் 19 தொற்றுறுதியான ஆயிரத்து 812 பேரில் ஆயிரத்து 613 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் புறக்கோட்டை – மிஹந்து மாவத்தையில் அமைந்துள்ள காவல்துறை அவசர தொலைபேசி அழைப்பு பிரிவின் 25 காவல்துறை அதிகாரிகளுக்கு இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் இருந்து வெளியேறிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முந்தல் – சின்னப்பாடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

29 வயதான அவர் இந்த மாதம் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பொது சுகாதார பரிசோதகர்களால் சுயதனிமைப்படுத்தப்பட்டிந்தார்.

எனினும் சுகாதார வழிமுறைகளை மீறி அருகில் உள்ள கிராமம் ஒன்றின் பல வீடுகள் மற்றும் சூதாட்ட நிலையத்திற்கும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருடன் தொடர்பை பேணிய 8 குடும்பங்களை தனிமைப்படுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கொவிட் 19 இற்கு எதிரான தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டுவரும் போது இந்தநாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பொது மக்களுக்கு பொருத்தமான முறையில் கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் எதிர்காலத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

x