அதிக மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்து.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை காரணமாக லக்ஸபான கெனியோன், மவுசாகலை, விமலசுரேந்திர நவ லக்ஸபான பொல்பிட்டிய, காசல்ரி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகின்றன. காசல்ரி நீர்தேக்கத்தில் வான் பாய்வதற்கு சுமார் ஆறு அங்குலமே காணப்படுவதாக மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த 18ம் திகதி ஆறு மணி முதல் இன்று 19 ஆறு மணிவரை சுமார் 124 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி நீரேந்து பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

இதனால் வீழ்ச்சிகளின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன. எனவே நீர்த்தேக்கங்களுக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளன. கடும் குளிர் மற்றும் தொடர் மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வருகை குறைந்துள்ளது. இதனால் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு அடிக்கடி மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரோல் தோட்டத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தொடர் குடியிருப்பில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த வீட்டில் வாழ்பவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல வழியில்லாததனால் தொடர்ந்தும் அந்த குடியிருப்பிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.